ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 10 மணி... சென்னை உயர் நீதிமன்றம் அருகேபரபரப்பான போக்கு வரத்து நிறைந்த சாலையில் மறியலில் திடீரென ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள், சிறிது நேரத் தில் சென்னை நகரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். நிலைமையை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீ ஸார் குவிக்கப்பட, அங்கு மீண்டும் ஒரு கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற பதைபதைப்பான சூழல். சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மீது போலீஸார் நடத்திய தாக்குதலே இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ''எங்கள் நண்பனை அநியாயமாக அடிச்சுக் கொல்லப் பார்த்தாங்க'' என்று கொந்தளிப்புடன் சொன்னார்கள் மாணவர்கள். அசோக்குமாரின் அண்ணன் சூர்யபிரகாஷ் நம்மிடம், ''என் தம்பி 'தமிழக மக்கள் உரிமைக் கழக'த்தின் காஞ்சி புரம் மாவட்டப் பொறுப்பாளர். போலீஸ் செய்யும் மனித உரிமை மீறல்களை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி களில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவான். திருக்கழுக்குன்றம் பகுதியில் போலீஸார் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகளையும், லஞ்ச லாவண்யங்களையும் கூட்டங் களில் பேசி அம்பலப்படுத்துவான். இதனால், ரொம்ப நாளாவே போலீஸ் காரங்களுக்கு அவன் மீது கடுப்பு. அதைத்தான் இப்ப பயன்படுத்திக்கிட்டாங்க அன்னிக்கு அசோக்குமார் ஸ்டேஷனுக்குப் போனதுமே, 'அட, நீயா... வசமாத்தான் வந்து சிக்கிட்டே...' என்று சொல்லி, 'என்ன ஏது..?' என்றுகூட விசாரிக்காமல், தகராறு செய்த சக பயணியை அனுப்பி விட்டார்கள். அடுத்து ஒரு போலீஸ் என் தம்பியின் கன்னத்தில் அறைந்து இருக்கிறார். அப்போது என் தம்பி, 'நான் சட்டக் கல்லூரி மாணவன்...' என்று சொன்னதும், 'எல்லாம் தெரியும்டா... 'னு (சாதியைச் சொல்லி திட்டியதாக இவர் சொல்கிறார்!) இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் வின்சென்ட், எஸ்.ஐ-க்கள் சரவணன், ரத்தினசாமி உட்பட எட்டு போலீஸ்காரங்க அவனைத் தாக்கி இருக்காங்க. அப்பவும் ஆத்திரம் தீராதவங்க, அவன் உடைகளைக் கிழிச்சு நிர்வாணமாக்கி, தண்ணீரை ஊத்தி சித்ரவதை செஞ்சு இருக்காங்க.விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சதும், ஸ்டேஷனுக்கு ஓடினோம். அவமானம் தாங்காம எங்க முன்னாடி வர மறுத்துட்டான். நான்தான் புது லுங்கியைவாங்கிட்டுப் போய் அவனுக்குக் கட்டிவிட்டேன். போலீஸ் அடிச்ச அடியில் மேல்தாடையில் பல் உடைஞ்சு, உதடு கிழிஞ்சிருந்தது. பாதத்தில் தோல் உரிஞ்சுபோச்சு. கழுத்து, தலை, தொடைன்னு உடம்புல பல இடங்களில் பலமாத் தாக்கி இருந்தாங்க. அவனை மதியம் மூணு மணிக்கு கைத்தாங்கலாக் கூட்டிட்டுப் போனோம். அவன் உடல் நிலை இன்னும் மோசமடையவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அட்மிட் செஞ்சோம். அங்கேயும் போலீஸ்காரங்க வந்து, 'உன் தம்பி எங்ககிட்ட வாலாட்டுற வேலையை இதோட நிறுத்திக்க சொல்லு. இதுக்கு அப்புறமும் பிரச்னை பண்ணா, என்கவுன்ட்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்'னு மிரட்டிட்டுப் போனாங்க. அன்னிக்கு ராத்திரி ஒன்றரை மணி இருக்கும். படுக்கையில் இருந்தவன் ஆளைக் காணோம். பாத்ரூம்ல ஏதோ சத்தம் கேட்க... ஓடிப் போய்ப் பார்த்தா, லுங்கியை விட்டத்தில் கட்டித் தூக்குல தொங்கிட்டு இருக்கான். நல்லவேளையாக் காப்பாத்திட்டேன்...'' என்றார் கலங்கிய கண்களுடன் . இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கரசுப்பு, ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அசோக் குமார் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார் என்ற தகவல் பரவிய உடனேயே கொதித்துப்போன மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் தலைமை நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோரிடம் மனு கொடுத்தோம். அதில், 'இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அசோக்குமாரைத் தாக்கிய போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மாணவரின் உடல்நலன் கருதி அவரை சென்னை அப்போலா மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்...' என்று கேட்டு இருந்தோம். நீதிபதிகள் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், அசோக்குமாரை அப்போலா மருத்துவமனையில் சேர்க்கவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்தனர்...'' என்றார். சீனியர் வக்கீல்கள் நம்மிடம், ''அசோக்குமாரை நாங்கள் இனியவன் என்றுதான் கூப்பிடுவோம். எப்போதுமே அவன் உயர் நீதிமன்ற வளாகத்தில்தான் இருப்பான். சமூக அக்கறை கொண்டவன். நிறையப் போராட்டங்களில் கலந்து கொள்வான். தற்போது திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆல்பர்ட் வின்சென்ட், இரு வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு இன்ஸ்பெக்டராக இருந்தார். அங்கு இருந்த அகதிகள் முகாமில் அவர் நடத்திய அத்துமீறல்கள் குறித்து அப்போதே இனியவன் போராட்டம் நடத்தினான். தமிழீழத்துக்காக நடந்த போராட்டத்தில் திருக்கழுக்குன்றம் மலை உச்சியில்போராட்டம் செய்தான். சமீபத்தில், உமா சங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் அதைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினான். இதை எல்லாம் மனதில்கொண்டு வஞ்சம் தீர்க்கும் வகையில் போலீஸார் அவனைத் தாக்கி இருக்கிறார்கள். தன்னை விமர்சிப்பவர்கள் மீது இந்த அரசாங்கம் எடுக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறோம். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் இனியவன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு இந்த அரசுதான் பொறுப்பு. அப்படி நேர்ந்தால் நாங்கள் யார் என்பதை அரசுக்குக் காட்டு வோம்...'' என்றார்கள் ஆவேசமாக! அப்போலோ மருத்துவமனையில் அசோக் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்ப தாகவே அவரது உறவினர்கள் சொல்கிறார்கள். அவரது மூளையில் ரத்தம் உறைந்துவிட்டதாலும், கழுத்து நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாலும், நான்கு நாட்களுக்குப் பிறகே எதையும் சொல்ல முடியும் என்று சொல்லி இருக்கிறார்களாம் டாக்டர்கள். பழி வாங்குவதற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டதா என்று திருக்கழுக் குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் வின்சென்ட்டிம் கேட்டோம். ''அந்தப் பையன் யாருன்னுகூட எனக்குத் தெரியாது. அவரை முன்னபின்ன பார்த்ததே இல்லை. பஸ் டிரைவர்தான் அவரை பஸ்ஸிலேயே ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்தார். நாங்க அவரை அடிக்கக்கூட இல்லை. வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் அனுப்பிவிட்டோம். ஆனா, அவராகப் போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிட்டு நாடகம் ஆடுகிறார்...'' என்றார். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 'சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மூன்று வாரங்களுக்குள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. நன்றி:விகடன் இதனை பற்றிய சவுக்கின் பதிவு http://www.savukku.net/2010/08/blog-post_18.html காவல் துறை நமக்கு காவலா? ஆம் காவல்தான் நம்மிடம் வசதியும் அதிகாரமும் இருந்தால்......மட்டும். |
"No Real Change in History has ever achieved by Discussions"சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !சூழ் கொடு சாகும்.
Font Size
Saturday, August 21, 2010
காவல் துறை நமக்கு காவல் ....அப்படியா ?
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment